ஶ்ரீமதுபயவே. மஹாவித்வான். திருமலை சதுர்வேத ஶதக்ரது.
நாவல்பாக்கம். யஜ்ஞவராஹ தாதயார்ய மஹாேதேஶிகன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: |
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம: |
அஹோ பாக்யம் அஹோ பாக்யம் அத்ராஸ்தே ஸூக்தி புஞ்ஜகம் |
அஹோராத்ரம் யத் ஆஸ்வாத்யம் அம்ஹஸாம் ச விநாசகம் ||
(ஆஹா! நமக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இந்த தளத்தில் இருக்கிற நல்லுரைக் கொத்து அல்லும் பகலும் ரசிக்கக் கூடியதாகவும், பாவங்களை அழிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!)
உலகில் உள்ளம் கவரும் நூல்கள் வேறாகவும், உயர்வை உண்டாக்கும் நூல்கள் வேறாகவும், இருப்பது கண்கூடு. ஆனால் இப்போது திருவள்ளூர் ராகவநரசிம்மன் என்கிற பாகவதோத்தமர், இவ்விரண்டையும் ஒன்று சேர்ப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.
"ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் நன்மொழிகளை ஒன்று திரட்டிப் பயனடைக"
என்கிற ஒரு பிரமாண வசனத்தைக் காட்டுகிறார் ஸ்வாமி தேசிகன் தமது ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில். இதை வேறு யாராவது திரட்டிக் கொடுத்தால் நாம் எளிதில் பயனடையலாமே என்று நம்மில் பலர் பாரித்ததுண்டு. இதோ அது நிறைவேறி விட்டது.
புண்யசாலிகளை மனத்தால் எண்ணுவதை ஒரு பிராயச் சித்தமாக விதித்தார் கௌதம முனிவர்
. இந்தக் கழுவாயை எளிதாக்குகிறது இப்போதைய இந்தத் திருப்பணி. எத்தனையோ ஸ்ரீவைஷ்ணவப் பெரியோர்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது இந்த தளம். அவர்களுடைய சரித்திரம் நமக்குப் பாவனம் (நம்மைத் தூய்மைப் படுத்த வல்லது). அவர்களுடைய வாய் மொழிகள் நமக்கு உஜ்ஜீவனங்கள் (உய்விக்க வல்லவை).
"எங்கள் குலபதிகள் இவை மேலாம் என்றே எண்ணிய நல் வார்த்தைகள் நாம் இசைகின்றோமே "என்கிறார் தேசிகன்
. அவருடைய திருநக்ஷத்ர நன்னாளிலே அவர் இசையும்படியாக நல் வார்த்தைகளைத் தொகுத்து அளிக்கிற இந்த கைங்கர்யமே நாம் ஸ்வாமி தேசிகனுக்கு ஆற்றுகின்ற தொண்டுகளில் தலை சிறந்ததாகும். இக் கைங்கர்யம் மேன்மேலும் சிறப்பதற்கு ஆசார்யர்களின் க்ருபாவலம்பம் என்றைக்கும் கிடைக்கும்.
இவண் தாஸன்
நாவல்பாக்கம் யஜ்ஞம்.